கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.
இக்கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது.
தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும்.
காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது...
ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.
...ஓம் நமசிவாய...
No comments:
Post a Comment