Latest News About 'AARAMBAM'
'ஆரம்பம்' என்று தலைப்பு வெளியிட்டதில் இருந்து அஜித் - விஷ்ணுவர்தன் படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்த நாள் அன்று நடைபெற உள்ளது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள படம் 'ஆரம்பம்'. விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள்
கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார். 'ஆரம்பம்' படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், பேட்டி கூட அளிக்காமல் இருந்த படக்குழு, தற்போது படத்தினைப் பற்றிய தகவல்களை வெளியிட
ஆரம்பித்து இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன், " 'பில்லா' படத்திற்குப்பிறகு நானும் அஜித்துடன் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்து இருக்கிறது. கண்டிப்பாக அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும்.
'ஆரம்பம்' ஒரு கேங்ஸ்டர் படம் அல்ல. நிறைய திருப்புமுனைகள் நிறைந்த ஆக்ஷன் கதையாகும். நிறைய இடங்களுக்கு கதை பயணிக்கும்.அதனை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறோம். இவ்வளவு நடிகர்கள் நடிக்கும் படத்தினை 120 நாட்களில் முடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆரம்பம்' படத்தினைப்
பற்றி என்ன கூறினாலும், அது அஜித் படம் என்ற பெயரை மட்டுமே கொடுக்கும். அவருடைய நடிப்பும், வசீகரமும் படம் முழுவதும் நிறைந்து இருக்கும்.
இப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறேன். அதுமட்டுமன்றி, தேசிய விருது வென்ற லால்குடி இளையராஜாவின் செட் வடிவமைப்பும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தன.
எனது திரையுலக வாழ்க்கையில், ஆரம்பத்தில் இருந்தே யுவனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் எந்த மாதிரி இசையை எதிர்பார்ப்பேன் என்பது யுவனுக்குத் தெரியும். படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, கதைக்குப் பொருத்தமான தலைப்பை பரிசீலித்து வந்தோம். நிறைய தலைப்புகள் யோசித்தோம். இறுதியாக 'ஆரம்பம்' என்ற தலைப்பே கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது" என்று தெரிவித்து இருக்கிறார்
விஷ்ணுவர்தன்.
No comments:
Post a Comment